
Thursday, Oct 01, 2026
பாடுகளின் களத்தில் மகிழ்ச்சி காண்போம்!
கேரீத் அன்பர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!
கம்யூனிசச் சிறையில் பல ஆண்டுகள் சித்திரவதை அனுபவித்த ரிச்சர்டு உம்பிராண்டும், அவரது மனைவி சபீனாவும் தாங்கள் கற்றுக்கொண்டதை இவ்விதமாக விளக்கினர், “சிறையில் நாங்கள் இறையியலைக் களைந்து இறைவனைக் கற்றுக்கொண்டோம். இதேப் பாணியில் மார்ட்டின் லூத்தரும், “உபத்திரவங்களுக்குள் வரும்வரை திருவசனத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை” என்றார்.
கிறிஸ்துவின் நிமித்தம் படும் உபத்திரவங்கள் நமக்குக் கர்த்தருக்குள் உண்டாகும் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பது தேவனுடைய இராஜ்யத்திற்கு அடுத்த நியமமாகும். நீதிக்காக கர்த்தருடைய வார்த்தையின்படி இசைந்து வாழ நினைத்தவர்களுக்குத் துன்பம் மற்றும் பாடுகள் வரத்தான் செய்யும். இந்த உலகத்தில் துன்பத்தை அனுபவிக்கும்போது கிறிஸ்துவின் பிள்ளைகள் சந்தோஷம் கொள்ள வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் நீதிக்காக எவ்வளவுக்கெவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்த ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
பவுல் தீமோத்தேயுவிற்குச் சொல்லும்போது: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோ. 3:12).
எனவே எனக்குப் பிரியமான வாலிப உள்ளங்களே, நீதியினிமித்தம் துன்பப்பட்டு வேதனைகளைச் சகிக்கிறவர்களுக்குப் பரலோக ஈவுகளும், தேவனுடைய இராஜ்யத்தில் பங்கும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவுக்கு உண்மையாயிருப்பதன் மூலம் உபத்திரவத்தை அடைபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர். காரணம் பரிசுத்த ஆவியானவர் விசேஷ விதமாக அவர்கள் மேல் தங்கியிருப்பார்.
செப்டம்பர் மாதத்தில் தண்டையார்பேட்டை, சூளைமேடு, ரெட்ஹில்ஸ் ஆகிய முன்னேற்றப்பணி மாவட்டங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகைகளைக் கர்த்தர் ஆசீர்வதித்துக் கொடுத்தார். தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைகள், முகாம், மிஷன் எக்ஸ்போ ஆகிய ஊழியங்களுக்காக தவறாது ஜெபியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Tuesday, Sep 01, 2026
வேதக் களத்தில் சபையைக் கட்டுவோம்
சபைக்கு தலையாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் கேரீத் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
அப்போஸ்தலர்களின் காலமே புதிய ஏற்பாட்டு சபையின் துவக்கம் என அறிகிறோம். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட சீஷர்கள் வசனத்தை பிரசங்கித்தார்கள். வசனத்தைக் கேட்டவர்கள் அதற்கு கீழ்ப்படிந்து, வசனத்தை ஏற்றுக்கொண்டார்கள். கீழ்ப்படிந்தவர்கள் ஒன்று கூடி கர்த்தரை ஆராதித்தார்கள். இப்படி ஆரம்பிக்கப்பட்ட சபை, வளருகின்ற சபையாக இருந்தது. அப். 6:7இல் “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்” என்பதாக வாசிக்கிறோம். சீஷர்கள் மூலம் எருசலேமில் சபை உருவானது. தொடர்ந்து பவுல் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கிறார். பிலிப்பியில் பவுல் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கும் போது லீதியாள் கர்த்தரை ஏற்றுக் கொள்கிறாள். இங்கே ஒரு சபை உருவானது. பிலிப்பி சபை வேகமாக வளர்ந்து விசுவாசத்தில் உறுதிப்பட்டது என்று பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தில் இருந்து அறிந்துக்கொள்கிறோம். பவுல் தொடர்ந்து தனது மிஷனெரிப் பயணங்களில் வேத வசனத்தை விதைத்துக்கொண்டே இருந்ததால் சபைகள் வளர்ந்து பெருகிக்கொண்டே இருந்தது. “இவ்வளவு பலமாய் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது” என்பதை அப். 19:29இல் வாசிக்கிறோம். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது. இதைத் தான் கர்த்தர் ஏசாயா 55:11இல் “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” என்று கூறுகிறார்.
அப்போஸ்தலர் காலத்தைத் தொடர்ந்து அநேக தேவனுடைய மனிதர்கள் வேத வசனத்தை விதைத்தார்கள். கையினால் எழுதப்பட்டிருந்த ஆங்கில வேதாகமத்தை அச்சு வடிவில் கொண்டு வந்தவர் வில்லியம் டிண்டேல். சாதாரண மக்களின் கைகளில் வேதாகமத்தை தவழச் செய்த இவர் அக்டோபர் 6, 1536ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கம்பத்தில் கட்டி, தீ வைத்துக் கொல்லப்பட்டார். இதன் விளைவு இங்கிலாந்தில் வேதாகம சங்கம் உருவானது.
தொடர்ந்து மிஷனெரிகள் பலர் இந்தியாவிற்கு வந்து வேத வசனத்தை விதைத்ததினிமித்தம் சபைகள் உருவாகி, வளர்ந்தது. இப்படி உருவான சபைகளிலிருந்து இன்றைக்கு ஊழியர்கள் புறப்பட்டு சென்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கர்த்தருடைய வசனத்தை விதைத்து வருவதால் சபை உருவாகிக்கொண்டே வருகிறது. நாம் இயக்கமாக இந்த பிரதானப் பணியைச் செய்துக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய மனுஷன் எந்த நற்கிரியையும் செய்ய தகுதியுள்ளவனாக மாறுவதற்கு வேத வசனம் காரணமாய் இருக்கிறது என்பதை 2 தீமோ. 3: 17இல் பவுல் குறிப்பிடுகிறார். பவுல், தீமோத்தேயுவைப் போன்று சபையை உருவாக்கும் தலைவர்கள் இன்றைக்கு தேவை.
பிரியமான வாலிபர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் சபையை உருவாக்கும் தலைவர்களாக மாற வேண்டும். இதற்கு உங்களுடைய வாலிப நாட்களில் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வேத வசனத்தை அறிவிக்க புறப்பட்டுச் செல்லுங்கள். புதிய சபைகள் நாடு எங்கும் உருவாகட்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் தென்காசி பிராந்தியத்தில் நடைபெற்ற உபவாச கூடுகை, திருப்பத்தூரில் நடந்த உபவாச ஜெப முகாம் ஆகியவற்றில் கலந்துகொண்டது அனைவரின் ஆவிக்குரிய வாழ்விற்கும் மிக ஆசீர்வாதமாக இருந்தது. ஆகஸ்ட் 15 தீப் மீனாட்சிபுரம் மற்றும் ஆகஸ்ட் 23ஆம் தேதி பாடிகுப்பத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகைகளைக் கர்த்தர் ஆசீர்வதித்து கொடுத்தார். இந்த கூடுகைகளுக்காக ஜெபித்து, உழைத்த நமது தலைவர்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைகள் மற்றும் ஜார்கண்ட் பணித்தள விஜயங்களை கர்த்தர் ஆசீர்வதித்து நல்ல விளைவுகளைத் தர உங்கள் ஜெபங்களில் எங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். வேத வசனத்தில் வளர்ந்து பெருகிட ஆண்டவர் நமக்கு கிருபைத் தருவாராக. ஆமென்.
தேவ கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
“சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம் அவரின் வார்த்தையே”
Saturday, Aug 01, 2026
மன்றாட்டு களத்தில் ஜெயம் காண்போம்!
பரிந்து பேசும் ஜெபத்திற்கு அழைக்கின்ற இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாலிபர்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!
மன்றாட்டு ஜெபம் என்பது மற்றவர்களுக்காக தேவசமூகத்தில் நாம் பரிந்துபேசுவது. நாம் சுயத்திற்கு மரித்து, மற்றவர்களின் சுகவாழ்விற்காக செயல்படுவதாகும். நாம் வாழும் இந்நாட்களில் மன்றாடி ஜெபிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மற்றவர்களுக்காக விலைக்கிரயம் செலுத்தவும், ஜெபத்திலே மன்றாடவும், ஜெபிக்கவும் கூடிய மக்களை ஆண்டவர் தேடிக்கொண்டிருக்கின்றார்.
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். (எசே.22:30)
ஜெபிக்கிற மனிதன் மட்டுமே தேவனைப் பிரியப்படுத்துகிறான். ஆரம்ப நாட்களில், சுவிசேஷத்திற்கு கொஞ்சமும் மதிப்பு கொடுக்காத பஞ்சாபிலுள்ள சியல்கோட் மாவட்ட மக்கள், ஜெபிக்கும் ஜான் ஹைடு என்ற தேவ ஊழியரின் மன்றாட்டு ஜெபத்தின் மூலமாக சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டார்கள். இன்று பஞ்சாபில் திரள் கூட்ட மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
மன்றாட்டு ஜெப வீரன் அல்லது மன்றாட்டு ஜெபக்குழுவினர் மக்களின் பாவத்தைத் தன் மீது அல்லது தங்கள் மீது போட்டுக்கொண்டு பாவிகளோடு தங்களை ஒன்று சேர்த்துக்கொள்வார்கள். உதாரணமாக மோசே, நெகேமியா, எஸ்றா, தானியேல் இவர்களைப் போன்று பரிந்துப் பேசும் ஜெப வீரர்கள் திரளாக இக்காலத்தில் தேவைப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட மன்றாட்டு ஜெப வீரர்களாக நாம் இந்த பொறுப்பை ஏற்கவும், முன்வரவும் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். இத்தேசத்திற்காக மற்றும் இத்தேசமக்களின் சுகவாழ்விற்காக மன்றாட உங்களை அர்ப்பணிக்க மாட்டீர்களா?
ஜூலை மாதம் நடைபெற்ற வாலிபத் தலைவர்கள் முகாம் மற்றும் கூடுகைகள் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றதற்காய் தேவனைத் துதித்து, ஜெபித்த உங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
இம்மாதம் 7-9 வரை நடைபெறவுள்ள மாநில உபவாச ஜெப முகாமிற்காகவும், 15ஆம் தேதி (சுதந்திர தின விடுமுறை) தீப் மீனாட்சிபுரம் (தென்காசி மாவட்டம்) மற்றும் 30ஆம் தேதி தண்டையார்பேட்டை போன்ற இடங்களில் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைக்காகவும் தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவன் தேடுகின்ற மனிதன் நான்தானென்று நம்மை அர்ப்பணித்து வாழ்வோம். அப்போது தேசம் மறுமலர்ச்சி அடையும். தொடர்ந்து உங்கள் ஜெபங்களில் எங்களை நினைவுக்கூர்ந்திடுங்கள்.
தேவ கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Wednesday, Jul 01, 2026
வர்க்கக் களத்தில் எளியோர் பக்கம் இருப்போம்!
நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாலிபர்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பின் வாழ்த்துகள்!
செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் தனித்தனியே பிரிக்கும் ஒரு மேய்ப்பன் போல இயேசுகிறிஸ்து இருப்பார். எதன் அடிப்படையில், எதைக் கொண்டு கிறிஸ்து மனிதர்களை வேறு பிரிப்பார்? பூமியிலே வாழ்ந்த நாட்களில் இயேசுவுக்கு அன்பின் நற்செயல்களைச் செய்தவர்கள் அவரது வலது பக்கத்தில் நிறுத்தப்படுவார்கள். இவர்களுக்கு இயேசுவுக்காகத் தாங்கள் செய்தது எதுவும் நினைவிருக்காது. தாங்கள் செய்த உதவிக்கு பதிலாக எந்த பலனையும் எதிர்பார்க்காதவர்கள். தனக்கு திரும்ப அவர்கள் உதவி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் உதவுபவர்கள், அன்பினால் கிரியைச் செய்கிறவர்கள். இப்படி செய்கிறவர்களை இயேசு “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்பதாக மத்தேயு 25:40இல் கூறுகிறார்.
சமூகத்திலுள்ள மக்களின் பொருளாதாரம், வருமானம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் குழுக்கள் “வர்க்கம்” என குறிப்பிடப்படுகிறது. நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்ற மக்களை நாம் இதன் அடிப்படையில் தான் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால் இயேசு சகல மனிதர்களையும் நேசிக்கிறார். அவர்களை தமது சகோதர, சகோதரிகளைப் போல நேசிக்கிறார். உயர் சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டவர்கள், தள்ளப்பட்டவர்கள் என அனைவருக்கும் இயேசு உதவி செய்கிறதை நாம் வேதத்தில் காண்கிறோம். மத். 15:21-28 வரையுள்ள பகுதியில் கானானியப் பெண் ஒருத்தியின் மகளுக்கு இயேசு உதவி செய்ததை நாம் அறிந்திருக்கிறோம்.
பிரியமான வாலிபர்களே! நம்மைச் சுற்றிலும் பல தேவைகளோடு இருக்கின்றவர்களுக்கு இயேசுவின் அன்பினால், எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் உதவிச் செய்வோம். வெளி 20:12இல் “மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனுடைய கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் நம் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்வோம். இயேசுவைப்போல அன்பினால் வர்க்கக் களத்தில் எளியோர் பக்கம் இருப்போம்.
தேவ கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி
Monday, Jun 01, 2026
சமுதாயக் களத்தில் உண்மையாய் வாழ்வோம்!
பிரியமான வாலிபர்களுக்கு,
வார்த்தையிலும், செயலிலும் உண்மை உள்ளவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!
சிமிர்னா சபைக்கு வரக்கூடிய துன்பங்கள் மற்றும் பாடுகளை இயேசு முன்பதாகவே சொல்வதை வெளி 2:10இல் நாம் பார்க்கிறோம். நீங்கள் 10 நாட்கள் உபத்திரவப்படுவீர்கள் என்பது, 10 விதமான பாடுகளாய் கூட இருக்கலாம் (நீரோ மன்னன் தொடங்கி போர்ச்சுகீசியனுடன் முடிவடைந்த 10 பாடுகளைக் குறிக்கலாம்). கிறிஸ்தவர்களாகிய நாம் துன்பங்களில், பாடுகளில் பாதுகாக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதி கொடுக்கப்படவில்லை. ஆனால் நமக்கு வருகிற துன்பத்தின் வழியாக நாம் காக்கப்படுகிறோம். இயேசு ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதில்லை. ஆகையால் நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்? என்று நாம் அறிக்கையிட்டு மரணபரியந்தம் உண்மையாயிருந்து வாடாத, அழிவில்லாத ஜீவ கீரிடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபைச் செய்வாராக.
கர்த்தருடைய பெரிதான கிருபையால் 2026ஆம் ஆண்டின் தமிழ் மாநில முகாம் சிறப்பாக நடைபெற்றது. தேவனுக்கே மகிமையுண்டாவதாக. இதில், வாலிபர்கள் கூடுகையில் கலந்து கொண்ட 460 வாலிபர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன். இவ்வாலிபர்கள் கேட்ட ஆண்டவருடைய வசனங்கள், மிஷனெரிகளின் சாட்சிகள் மற்றும் பெற்றுக்கொண்ட ஜெப பாரங்கள் இவற்றின் மூலமாக, இவர்கள் எடுத்த தீர்மானங்களில் நிலைத்து நிற்க நம்முடைய ஜெபங்களில் நினைவுக் கூறுவோம். இம்முகாமிற்காக ஜெபத்தோடு பிரயாசப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
மே 28-30 வரை TWR Centre, பரமன்கேனியில் கல்பாக்கம் வட்டார வாலிபர் முகாம் சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவினார். இம்முகாமிற்காக ஜெபித்து, உழைத்த அனைத்து போதகர்கள் மற்றும் தலைவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
1967 ஜூன் 9ஆம் தேதி நமது இயக்கத்தின் முதல் மிஷனெரியாக Rev. ஹேரீஸ் ஹில்டன் அண்ணன், அன்றைய தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியமலை பகுதிக்கு சென்றார்கள். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (சகரியா 4:10) என்ற வசனத்திற்கேற்ப, இன்று நாம் 59வது ஆண்டை முடித்து 60ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க ஆண்டவர் தந்த கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். இந்த ஜூன் 9ஆம் தேதி பெரியமலையில் நடைபெறவுள்ள நன்றி கூடுகையில் வாய்ப்பு இருக்குமானால், நீங்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் இந்த மாதம் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைகளுக்காக (பெரியமலை, தூத்துக்குடி, அம்பத்தூர், கருங்கல்) ஜெபித்துக் கொள்ளுங்கள். மரணபரியந்தம் உண்மையாய் வாழ்ந்து ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபைத் தருவாராக! ஆமென்.
தேவ கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 