
Friday, May 01, 2026
தரிசனக் களத்தில் வீரியம் காண்போம்!
பேர் சொல்லி அழைக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், வாலிபர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்!
“உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்” (யோவேல் 2:28) என்பது கர்த்தர் யோவேலின் மூலம் கொடுத்த தீர்க்கதரிசனம். இந்த தீர்க்கதரிசனம் “தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே நடந்தேறுகிறது” என்பதாக பேதுரு அப். 2:16இல் குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர்கள் அனைவரும் தரிசனத்தோடு சுவிசேஷப் பணியை ஆரம்பித்தனர். இதன் விளைவாக “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப். 2:47).
தரிசனம் அல்லது தூரநோக்கு என்பது எதிர்காலத்திற்குரிய இலக்கைக் கொண்டது. ஒரு நிறுவனம் எதிர்காலத்தில் எதை அடைய விரும்புகிறது அல்லது எப்படி உயர்ந்த நிலைக்கு மாற விரும்புகிறது என்பதைக் காட்டும் முன்னோக்கிய ஊக்கம் கொடுக்கும் அறிக்கையாகும். இது வெற்றியின் ஒரு தெளிவான காட்சி. இந்த தரிசனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தனக்குள்ளே மட்டும் இதை வைத்துக்கொள்ளாமல் தன்னோடுள்ள மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அப்போது அது வளர்ச்சியையும், வெற்றியையும் தருகிறது. VBS Friends Fellowshipஇன் நண்பர்கள் 1959ஆம் ஆண்டு கோவில்பட்டியில் ஒரு வீட்டின் அறையில் சுமார் 25 பேர் ஜெபிக்க கூடினர். ஜெபிக்க கூடி வந்தவர்கள் உள்ளத்தில் கர்த்தர் விசேஷித்த ஆவியை வைத்ததினாலே, திட்டவட்டமான செயலுக்குள் இறங்க கர்த்தரிடமிருந்து அவர்கள் தெளிவான தரிசனம் பெற்றனர். இந்த தரிசனத்தினால் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு என்றதான இந்த மிஷனெரி இயக்கம் உருவானது. 1967இல் இந்த இயக்கம் முதல் மிஷனெரியை அனுப்பியது. தொடர்ந்து தரிசனத்தோடு ஜெபித்து, செயல்பட்டதினால் இன்றைக்கு மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.
“கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கைக்குத் தரிசனமும், தாகமும் இன்றியமையாத இரண்டு” என்பது லியோனார்டு ரேவன்ஹில் அவர்களின் பொன்மொழி. இதற்கு நெகேமியாவை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். இவர் ஜெபிக்கும் தலைவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவர். கர்த்தர் மேலிருந்த தன் முழு நம்பிக்கையினால் செய்ய முடியாது என்று தோன்றின கடினமான வேலைகளையும் கூட செய்து நிறைவேற்றினார். அவருடைய ஜெபம், தியாகம், கடின உழைப்பு, விடாப்பிடியான உறுதி அனைத்தும் கர்த்தர் அலங்கத்தை கட்டக் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றுவதற்கு உதவியது.
பிரியமான வாலிபர்களே! உங்கள் எதிர்காலத்தைக் குறித்த தரிசனம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி எந்த தரிசனமும் எனக்கு இல்லை என்ற நிலையில் இருப்பீர்களானால், உங்கள் எதிர்காலத்தை கர்த்தரிடத்தில் அர்ப்பணியுங்கள். சுவிசேஷத்தை இந்தியர்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு என்பதை மறந்து போகவேண்டாம். நீங்கள் தரிசனம் பெற்றால் களத்தில் வீரியம் காண கர்த்தர் உதவி செய்வார்.
இம்மாதம் 21 - 24 ஆகிய நாட்களில் சேலம், டேனிஷ்பேட்டையில் நடைபெறும் மாநில முகாமில் வாலிபர்களுக்கு தனி கூடுகை உண்டு. இம்முகாமிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நண்பர்கள், சபை மக்கள், உறவினர்களோடு வந்து கலந்து கொள்ளுங்கள் என்று அன்போடு அழைக்கிறோம். இம்முகாமிற்கு உங்களது வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
தேவ கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 